திங்கள், 13 ஜூலை, 2020

பெண் எனும் உடுக்கை - தியாகம்

லூசிபர்:
அந்த மாபெரும் ஸ்பின்னிங் மில் தனது அசுரத்தனமான இரும்பு கேட்டினைப் பூட்டியிருந்தது. அதன் அருகில் கொஞ்சம் தள்ளி குடிசை வேயப்பட்ட சிறிய டீக்கடையின் முன்பு பெருங்கூட்டமாக தொழிலாளர்கள் நின்றிருந்தனர். லூசிபர் டீக்கடையிலிருந்து ஒரு ஸ்டூலை எடுத்துப்போட்டார். அதன் மீது தாவி ஏறி நின்று தனது தொங்கும் மீசையை வருடியபடி பேசினார்.

“அன்பார்ந்த தோழர்களே, இதோ இதுதான் முதலாளித்துவம்...” பூட்டியிருந்த கேட்டினை நோக்கி கையை நீட்டியபடி சொன்னார், “...நம்முடைய எலும்புகளால் எழுப்பப்பட்ட கேட்டுகளால் நம்மையே வெளியேற்றும். நம் ரத்தம் பூசி எழுப்பப்பட்ட செங்கல் சுவர்கள் நம்மை பிரித்திருக்கும். எஃகாய் பிணைந்த நம் நரம்புகளால் ஆன வேலிகளால் நம்மை குத்திக் கிழிக்கும். இந்த அரசாங்கமும் போலிசும் என்றாவது தொழிலாளிகளுக்கு பாதுகாப்பளித்திருக்கிறதா, என்றாவது போலிசின் துப்பாக்கி சுரண்டித்தின்னும் முதலாளிகளைக் குறிவைத்திருக்கிறதா? ஆனால் தோழர்களே நமக்கான நாள் பிறக்கும். நம்முடைய அரசாங்கம், நம் தலைமையில், பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் பிறக்கும். அன்று புதிய வரலாறு நம் கையால், இன்றைய ஆளும் வர்க்கத்தின் ரத்ததாலான மையால் எழுதப்படும். அதுதான் நமக்கான, பாட்டாளி வர்க்கத்துக்கான உண்மையான விடுதலை... இன்குலாப் ஜிந்தாபாத்...“ லூசிபர் பேசுவதற்கு ஒலிப்பெருக்கிகள் எதுவும் தேவையில்லை. சுற்றிலுமிருந்த தொழிலாளர்கள் அவ்வப்போது கோஷங்கள் இடுவதைத்தவிர தங்கள் மூச்சுக்காற்று காதுகளில் ஒலிக்குமளவு அமைதியுடன் கேட்டுக்கொண்டிருந்தனர். பேசி முடித்து அனைவரும் கோஷங்களை எழுப்பியபடி மில்லின் கேட்டினை நோக்கி சென்றனர். அப்போது போலிஸ் இவர்களைத் தடுக்க முயன்று சிறிய தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்படியே அது தடியடியாக மாறி போலிஸ் கண்மண் தெரியாமல் அடிக்கத் தொடங்கியது. லூசிபர் இடக்கண்ணுக்கு மேல் புருவத்தில் பெரிய ரத்தக்காயத்துடன் மயங்கி விழுந்தார். பத்துபேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிதறி ஓடியவர்களின் அடியையும் விழுந்து கிடந்தவர்கள் மீது ஆத்திரம் கொண்டமட்டும் செலுத்திவிட்டு காக்கி கும்பல் மில்லுக்குள் நுழைந்தது.

கெயின்:
கெயினின் வக்கீல் அலுவலகம் வழக்கமான பரபரப்புகளை விடுத்து அமைதியாக இருந்தது. கெயின் தலையைக் குனிந்தபடி எழுதிக்கொண்டிருக்க அவரது முன்பு ஜானும் ஜேக்கப்பும் இரும்பு நாற்காலியின் அமர்ந்திருந்தனர். “தோழர் ஜான்..” என்று சிறிய இடைவெளி விட்டு அவரின் ‘சொல்லுங்க தோழ’ருக்காக காத்திருந்தவர், “...சேலத்துல பிரான்ஸிஸ் அண்ட் சன்ஸ்னு ஒரு மில்லுல லூசிபர்னு நம்ம தோழர் ஒருத்தரை போலிஸ் அடிச்சுட்டாங்க. நீங்க என்ன பண்ணுங்க நம்ம யூனியன் லேபருங்க கிட்ட சொல்லி கொஞ்சம் நிதி திரட்டி ஒரு போஸ்டர் அடிச்சுருங்க. அப்படியே ஒரு ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு பண்ணிடுங்க.” என்றார்.
“சரிங்க தோழர்..” என்றார் பவ்யமாக.
“அப்படியே பிரஸ் மேட்டர் எழுதிருக்கேன், எடுத்துட்டு போய் டைப் பண்ணிட்டு வந்துடுங்க.”
“சரிங்க தோழர், நாளைக்கே ஆர்ப்பாட்டம் வெச்சுடலாமா?”
“நாளைக்கு வெள்ளிக்கிழமைங்க. கவரேஜ் இருக்காது. திங்கள் கிழமை வெச்சாதான் மீடியா வருவாங்க. திங்கள்கிழமையே வெச்சுடுங்க.”
“சரி கிளம்புங்க”

லூசிபர்:
லூசிபர் வீட்டுக்கு வரும்போது வீட்டிற்குள் வீட்டு உரிமையாளர் அமர்ந்திருந்தார். தோளில் குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த லூசிபரின் மனைவி நான்சியிடம் அறிவுரை சொல்வதுபோல் எதோ சொல்லிக்கொண்டிருந்தார். லூசிபர் உள்ளே நுழையவும் பேச்சை நிறுத்திவிட்டு “வாப்பா. எப்படி இருக்க? காயமெல்லாம் பரவால்லியா?” என்றார். லூசிபர் புன்னகைத்தபடி பதிலளித்தாலும் அவன் மனதுக்குள் எதற்காக வந்தார் என்று குருகுறுத்தபடியிருந்தது. “தம்பிக்கு குடிக்க ஏதாவது குடும்மா” என்று நான்சியிடம் சொன்னார். நான்சி கொண்டுவந்த தண்ணீரைக் குடித்துவிட்டு, “என்னங்கய்யா இந்தப் பக்கம்? இன்னும் மாசம் பொறக்கலிங்களே” என்றார்.
“அது வந்து தம்பி...” என்று கொஞ்சம் தயங்கித் தயங்கியே வீட்டுக்காரர் பேசினார். “...உன்ன எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும். நம்ம சாதிக்காரன். எந்த வம்புதும்புக்கும் போக மாட்டேன்னு நம்பிதான் வீட்டை வாடகைக்கு விட்டேன்” என்றார்.
“நான் யார் கிட்டயும் எந்த வம்புதும்புக்கும் போகலீங்களே” என்றார் லூசிபர்.
“நீ போகலதான், இருந்தாலும்...” என்று இழுத்தார்.
“எதுவாருந்தாலும் சொல்லுங்கய்யா” என்று பட்டென்று கேட்டார் லூசிபர்.
“நேத்திக்கு நம்ம மொதலியார் சங்க கூட்டம் நடந்துச்சு. உனக்குத்தான் தெரியுமே. அதுல உனக்கு யாரும் வீடு வாடகைக்கு குடுக்கக் கூடாதுன்னு சொல்லி தீர்மானம் போட்டுட்டாங்கப்பா” என்றார்.
லூசிபர் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார்.
“நானும் எவ்வளவோ கேட்டுப் பாத்துட்டேன்பா. பாவம் கைப்புள்ளைய வெச்சுருக்கான். நல்ல பையன் நான் வேணும்னா பேசிப்பாக்குறேன்னு. ஆனா அவங்க கேக்கவேயில்லை. எல்லா மில்லுக்காரங்களும் சேந்துக்கிட்டாங்க அதுபோக சங்கத்துக்கு பிரான்ஸிஸ் அய்யாதான பொருளாளரு, அவர எதுத்துக்கிட்டு என்ன பண்ண முடியும் நீயே சொல்லு”
லூசிபர் இறுகிப்போன முகத்துடன் சொன்னான், “சரிங்கய்யா என்னால உங்களுக்கு ஒரு பிரச்சினையும் வேண்டாம். நான் ஒரு ரெண்டு மாசத்துல காலி பண்றேன்.”
“அது வந்து... இன்னும் ஒரு வாரத்துல காலி பண்ண வைக்கணும்னு சொல்லிட்டாங்க தம்பி”
சொந்த சாதியை பகைத்துக்கொள்ளாதவன் என்ன புரட்சியாளன் என்று லூசிபர் நினைத்துக்கொண்டார்.

கெயின்:
“நம்ம கெயின் தோழர் இருக்காருல்ல, என்ன ஆளுங்க தெரியுமா?” என்றார் ஜான்.
“தெரியுமே, அவுங்க பிராமின்ஸ்” என்றார் ஜேக்கப்.
“இப்படி இருந்து நம்ம கூட வந்து வேலை பாக்குறது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா?”
“அப்படியா?”
“இல்லையா பின்ன. அவுங்க சாதிக்காரங்களையே பாப்பானுங்கன்னு பேசுவாரு”
“பாரேன்”
“அது மட்டுமா? அவங்க பூணூலு போடுவாங்கல்ல”
“ஆமா”
“அதை அறுத்துட்டுதான் கட்சிக்கே வந்தாரு”
“அவரு வீட்டுல ஒன்னும் சொல்லலியோ”
“அதெல்லாம் யாருக்கு தெரியும், எப்படியும் தள்ளி வெச்சுருப்பாங்க”
“அய்யய்யோ”
“சொந்த சாதியவே பகைச்சுக்குற அளவு கட்சியில ஈடுபாடுய்யா. கெயின் தோழர்னா சும்மாவா”
“இப்படியெல்லாம் ஒரு தோழர் நமக்கு கிடைக்கணுமே” என்றார் ஜேக்கப். அவரை சுற்றி நின்றபடி டீ குடித்துக்கொண்டிருந்த நான்குபேரும் உச்சுகொட்டியபடி ஆமோதித்தனர்.

லூசிபர்:
நான்சி ஒரு கையில் இறுக்கமாக மஞ்சப்பையைப் பிடித்தபடி நடந்துகொண்டிருந்தார். ‘குழந்தை அழுதிருப்பாளோ’ என்று மனது படபடவென்று அடித்துக்கொண்டிருந்தது. கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த புதிய மஞ்சள் கயிறுடன் முந்தானைக்குள் மறைந்திருந்த தாலியை இறுக்கமாகப் பிடித்தபடி தனது நெஞ்சை ஆசுவாசப் படுத்திக்கொண்டாள். கண்கள் கலங்கியபடியே இருந்தன. எப்போது வேண்டுமானாலும் அழுகையாக வெடிக்கும் பிரளயத்துக்குக் கண்கள் தயாராகவேயிருந்தன.
“ஏங்க கோட்டை மாரியம்மன் அடகுக்கட எங்கங்க இருக்கு?” என்று வெகுநேர தயக்கத்துக்குப் பின்னர் அருகிலிருந்த பெண்ணிடம் கேட்டார். அந்தப் பெண் தன் கணவரிடம் கேட்க அவர் நான்சிக்கு வழி சொன்னார். வழி சொல்லும்போதே இருவரும் நான்சியை பரிதாபமாகப் பார்த்ததாக நான்சிக்குத் தோன்றியது. அந்தப் பெண் நான்சியின் மஞ்சள் கயிறு மட்டும் தொங்கும் கழுத்தினைப் பார்த்தது கண்டு அவசர அவசரமாய்க் கேட்டுக்கொண்டு திரும்பி விருவிரென்று நடந்தார் நான்சி. கண்களில் வழிந்த நீரை அவசரமாக முந்தானையால் துடைத்துக்கொண்டார்.
வீட்டைக் காலி செய்து ரெண்டு மாதங்கள் ஆனபிறகும் சரியான வீடு கிடைத்தபாடில்லை. அம்மாப்பேட்டையில் பெரும்பாலும் முதலிமார்களின் வீடுகள்தான். யாருமே சங்கத்தை மீறி இவர்களுக்கு வாடகைக்கு விடவில்லை. அதைவிட்டால் பிராமணர்களும் சவுராஷ்ட்ராவினரும்தான் அவர்களும் இவர்களுக்கு வீடு வாடகைக்கு விடவில்லை. எத்தனை நாட்கள் சொந்தக்காரர்கள் வீட்டில் குடியிருப்பது. எங்கே போனாலும் போலிசும் சங்கத்து ஆட்களும் வந்து மிரட்டியபடியிருன்தனர். போலிசுக்குப் பயப்படாதவர்கள்கூட சங்கத்தில் இருந்து ஆள் வந்ததும் வெளியேற சொல்லிவிடுவார்கள். ஒவ்வொருமுறையும் சிறுத்துக்கொண்டிருந்த பண்டங்கள் அடங்கிய மூட்டையுடன் வேறெதுவும் நண்பர் வீட்டுக்கோ சொந்தக்காரர் வீட்டுக்கோ மாறிமாறிப் போய்க்கொண்டிருந்தனர். கடைசியில் நான்கைந்து வீடு மாறிய பிறகு கட்சிக்காரரின் உறவினர் மூலமாக ஒரு வழியாக வீடு வாடகைக்குக் கிடைத்தது. அவர் எவரின் உருட்டல் மிரட்டலுக்கும் பயப்படவில்லை. ஆனால் இப்போது பிரச்சினை வேறு வழியில் வந்தது.
அன்று “நெருப்புச்சுடர்” என்ற கட்சியின் பத்திரிக்கையைப் படித்துக்கொண்டிருந்தார் லூசிபர். மெட்ராஸில் நடந்த தொழிற்சங்க போராட்டங்கள் பற்றி எழுதியிருந்தது. ‘தொழிலாளர்கள் ஒரு ஷிப்ட் சம்பளத்தை இழந்து லாஸ் ஆப் பேயில் வந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்’ என்று எழுதியிருந்தது லூசிபர்க்கு சலிப்பூட்டியது. சேலத்தில் எத்தனை போராட்டங்களில் தொழிலாளர்கள் சம்பளத்தை இழந்து கலந்துகொண்டனர். எத்தனை கம்பெனிகள் காலவரையின்றி மூடப்பட்டன. அந்த தொழிலாளர்களெல்லாம் சம்பளமின்றிதானே இன்றும் போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர். ஏன் மெட்ராஸ் தொழிலாளர்கள் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது? ஆசிரியராக கெயின் இருப்பதால்தானோ என்று நினைத்துக்கொண்டார். புத்தகத்தில் வந்திருந்த முக்கால்வாசி கட்டுரைகள் கெயினால் எழுதப்பட்டிருந்தன. லூசிபர் கூட தஞ்சை நாகையில் விவசாயத் தொழிலாளர்கள் படும் சாதிய ஒடுக்குமுறைகளையும் அவர்களை வர்க்க ரீதியாக ஒன்றிணைக்க தொழிற்சங்கம் செய்ய வேண்டிய வேலைகள் குறித்தும் ஒரு கட்டுரை எழுதி அனுப்பியிருந்தார். ஆனால் அது வெளிவரவில்லை. ஆனால் அரசியல் ஒன்றுமற்ற வெற்றுச்செய்திகளும் மொழிபெயர்ப்புகளுமாய் நெருப்புச்சுடர் மாறிக்கொண்டு வருவதாக லூசிபருக்குத் தோன்றியது.
அப்போது சீருடையணியாத இரண்டு போலீஸ்காரர்கள் வீட்டுக்குள் நுழைந்தனர். இதுபோன்ற நிகழ்வு நான்சிக்கோ லூசிபருக்கோ புதியதல்ல. மற்ற போலிஸ்கள் போலில்லாமல் இவர்கள் குழைந்து குழைந்து பேசுவது கண்டு நான்சிக்குக்கூட இவர்களைப் பிடிக்கும். ஆனால் லூசிபர் இவர்களுடன் வெறுப்பாகவே பேசுவான். வந்தவுடன் நான்சி, “வாங்கண்ணே” என்றார். இந்தமுறை வந்தவர்கள் எப்போதும்போல குழைவாகப் பேசவில்லை, “லூசிபரு ஸ்டேஷன் வரைக்கும் போகணும் கிளம்பு” என்றனர்.
“என்ன விஷயம்? எதுக்கு வரணும்?”
“ஏய், கிளம்புன்னா புரியாதா?” ஒருவர் சட்டையைப் பிடிக்க இன்னொருவர் கையைப் பிடித்தார்.
“அய்யய்யோ அண்ணே” என்று பதறியபடி நான்சி ஓடி வர, “இந்தாம்மா... பேசாம போ” என்று மிரட்டலாகக் கூறினர். “எதுவாருந்தாலும் ஸ்டேஷன்ல வந்து பேசிக்க” என்று சொல்லிவிட்டு லூசிபரை வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.
பக்கத்து ஸ்டேஷன்க்கு சென்றபோது லூசிபர் அங்கே அழைத்துவரப்படவில்லை. CBCIDக்கு செல்லும்படி சொன்னார்கள். நான்சி அதைக் கேள்விப்பட்டதேயில்லை. இங்குமங்கும் அலைந்து கடைசியில் இரண்டு நாட்கள் கழித்து கட்சிக்காரர்களுடன் சென்று உருட்டி மிரட்டி கேட்டதில் கடைசியில் கேஸ் நம்பரை எதுவோ சொன்னார்கள். அதுவும் நான்சிக்குப் புரியவில்லை. கடைசியில் தோழர்கள் வெளியே வந்து விவரமாக சொன்ன பிறகுதான் புரிந்தது. ஏதோவொரு மில் முதலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிந்திருக்கிறார்கள் என்று.
தோழமைக் கட்சி வக்கீல்கள் யாரும் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவருக்கு ஆஜராக தயாராக இல்லை. மற்ற வக்கீல்கள் என்றால் பணம் வேண்டுமே.
ஒரு வழியாக கோட்டை மாரியம்மன் அடகுக்கடையைக் கண்டுபிடித்தபோது இன்னொருமுறை மஞ்சப்பையைத் தொட்டுப்பார்த்து அழுதுகொண்டாள்.

கெயின்:
“ஹலோ, எபிநேசரா? நான்தாண்ணா பெஞ்சமின் பேசறேன். சௌக்கியமா இருக்கேளா?... ஓ நேக்கென்ன.. பேஷா இருக்கேன். அப்பறண்ணா ஒரு ஹெல்ப். நம்ம ஜேம்ஸ் அண்ணா இருக்காரோன்னோ... ஆமாமா அவரேதான்... அவாளோட புள்ள ஒருத்தன் கெயின்னு இருக்கான். அவன் கொஞ்சம் சேஷ்டை. லாயராதான் ப்ராக்டிஸ் பண்ணிண்டு இருக்கான்... சிவில் இல்லண்ணா லேபர்... அதுல எதோ யூனியன் கீனியன்னு பழக்கம். அவன் எதோ பீகார் கட்சிக்காரன். இவனை நன்னா மாட்டி விட்டுட்டான். பாவம் எதோ த்ரீ நாட் டூ போட்டு விஜாரிக்கிறேன்னு அழைச்சுண்டு போயிருக்கா. நம்மவா நாலு பேரு போய் ஸ்டேஷன்ல சொன்னா விட்டுடுவா. நீங்க வர வேண்டாம், சும்மா ஒரு போன் மட்டும் பண்ணுங்கோ. உங்க ஜூனியர் ரெண்டு பேரை அனுப்பிநேள்னா. சும்மா ஒரு கூட்டம் காட்டத்தான். பண்றேளா. ரொம்ப சந்தோஷம்ணா. ஸ்டேஷன் நம்பரா? சொல்லட்டுமா? குறிச்சுக்கறேளா... ஆங் ஆங்.. சரி...” என்று நம்பரை சொல்லிவிட்டு போனை வைத்தார் பெஞ்சமின்.
“நீங்க ஒன்னும் வருத்தப்படாதேள்னா. ஒன்னும் ஆகாது எல்லாரண்டையும் பேசிட்டேன் இந்நேரம் ஒரு இருவது போன் போயிருக்கும் ஸ்டேஷன்க்கு. அதுலயே இன்ஸ்பெக்டர் பயந்துருப்பான். நான் நாலு ஜுனியரோட போய் அவனை அழைச்சுண்டு வந்துடறேன்.”
“அதெல்லாம் நேக்கு கவலை இல்லை. கஷ்டப்பட்டு பிஎல் படிச்சுட்டு உருப்படாம கட்சி கிட்சின்னு அலைஞ்சுண்டு இருக்கானேன்னுதான்.”
“அட விடுங்கோண்ணா, நம்ம ராபர்ட் இருக்கானே காலேஜ் படிக்கிறப்போ நாஸ்திகம் பேசிண்டு திரிஞ்சான். நெஜமாண்ணா. நம்புவேளா? பூநூலெல்லாம் அறுத்து போட்டுட்டு திகவுல சேந்துண்டு ஒரே ரகளை. இன்னொன்னு சொல்றேன் கேளுங்கோ... யாருக்கும் தெரியாம மட்டனெல்லாம் தின்னான்னு கூட கேள்வி”
“சிவசிவா...” என்று தலையில் அடித்துக்கொண்டார் ஜேம்ஸ்.
“அப்பறமா ஒரு கல்யாணத்தைப் பண்ணினதும் அவன் ஆத்துக்காரி அடியோட மாத்தலியா? எல்லாம் சரியாப் போயிடும்ணா கவலைப் படாதேள்”
சட்டை கசங்காமல் கெயின் போலிஸ் ஸ்டேஷனிலிருந்து வெளியேறினார். கட்சியின் பெயரையும் கெயினின் பெயரையும் கோஷம் போட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்களை அருகில் அண்டவிடாமல் வெள்ளைச்சட்டைகள் பார்த்துக்கொண்டன. ஜானை மட்டும் அருகில் அழைத்த கெயின் அனைவரையும் அடுத்தநாள் ஆபீசில் வந்து பார்க்கச் சொன்னார்.
அந்த மாத நெருப்புச்சுடரில் தோழர் கெயினின் தியாகமும் வழக்கு வரலாறும் கட்டுரையாக வெளியிடப்பட்டது.

லூசிபர்:
பிரான்ஸிஸ் அண்ட் சன்ஸ் மில் இழுத்து மூடப்பட்டது. தொழிலாளர்களுக்கு இழப்புத்தொகை கேட்டு வழக்கு நடந்துகொண்டிருந்தது. தொழிலாளர்கள் அனைவரும் வேறு மில்களுக்கு வேலைக்கு சென்றுவிட்டனர். லூசிபர் போன்ற தொழிற்சங்க முன்னணிகளுக்கு எந்த மில்லும் வேலை தரத் தயாராக இல்லை. லூசிபர் சொந்தமாக ஒரு தையல் மிசின் வாங்கி தையல் தொழில் செய்யத் தொடங்கினார். அதுவும் மாலை நேரங்களில் மட்டுமே. மற்ற நேரங்களில் கட்சி வேலையாக சென்றுவிடுவார். எவ்வளவு வேலை செய்தும் அவர் மாநிலக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப் படவில்லை. நெருப்புச்சுடர் மீதான அவரது காத்திரமான விமர்சனக் கடிதங்கள்தான் காரணம் என்று அரசல்புரசலாக பேசினாலும் லூசிபர் அதைக் கண்டுகொள்ளவில்லை. அப்படியே வருடங்கள் ஓடின. லூசிபரின் குழந்தை கேத்தரின் பள்ளி முடித்து கல்லூரியில் இணைந்திருந்தாள்.
கட்சிக்கென்ற தனி மாணவர் அமைப்பை உருவாக்க அவள்தான் யோசனையை முன்வைத்தாள். லூசிபருக்கு பெருமை தாளவில்லை. அவளது விடாத முயற்சியால் பல கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் கட்சிக்கு வந்தனர். பின்பு மாணவர்களை இணைத்து ஒரு மாநாடு நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. மாநாட்டில் கட்சியின் மாணவர் அமைப்பினைத் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாக கட்சியின் மாவட்டக் குழு முடிவு முடிவு செய்தது. அது குறித்த திட்டமிடல் கூட்டத்தில் பங்கெடுக்க மாநில செயலாளர் கெயின் வருவதாக முடிவு செய்யப்பட்டது.
கெயின் எப்போதும் பிளைட்டில்தான் வருவார் எனினும் மாணவர்கள் சம்பந்தமான கூட்டம் என்பதாலும், சேலத்தில் ஏர்போர்ட் இல்லை என்பதாலும் பெரியமனதுடன் ரயிலில் பர்ஸ்ட் கிளாஸ் ஏ.ஸியில் வந்துபோக சம்மதித்தார்.
“என்ன பேரு வைக்கலாம்னு இருக்கீங்க? உங்க மாணவர் அமைப்புக்கு” என்றார் கெயின்.
“மாணவர் பேரவை தோழர்” என்றாள் கேத்தரின்.
“அதாவது... மாணவர் அமைப்பு மாநிலம் முழுவதும் இருந்தா அப்படி வைக்கலாம். மாநிலம் முழுசும் இல்லையே. இப்போதைக்கு சேலம் மாணவர் பேரவைன்னு வேணும்னா வைச்சுக்கோங்க”
“அப்படி சொல்ல முடியாதே தோழர், இதோ பீட்டர் மதுரை, UG முடிஞ்சதும் அங்க போய்டுவாரு. இப்படி மாநிலம் முடிவதும் அமைப்பு வளருமே.”
“ஹஹஹா... மாணவர்கள் இன்னிக்கு இருப்பாங்க நாளைக்கு படிச்சதும் ஓடிடுவாங்க. கட்சி இவங்கள நம்பியா நடக்குது. எத்தனை வருஷம் பாத்துருக்கோம். இன்னிக்கு ஆர்வமா வருவாங்க நாளைக்கே போலிஸ் கேசுன்னு வந்தா ஓடிடுவாங்க...” என்று தொடங்கி கெயின் வெகுநேரம் பேசினார்.
அதன்பிறகு மாணவர் பேரவைக்கு பெயர்வைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

கெயின்:
“மாணவர் அமைப்புதான் கட்சியின் இதயம். அந்த இதயத்திலிருந்துதான் நம் கட்சிக்கு புது ரத்தம் பாயப்போகிறது. இதோ இந்த மெட்ராஸில் கூடியிருக்கும்... ஓ பேரை மாத்திட்டாங்களோ... சென்னையில் கூடியிருக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் நாளை லட்சங்களாக மாறப் போகின்றனர். அந்த லட்சங்கள்தான் நம் இலட்சியத்தை உயர்த்திப் பிடிக்கும் பதாகைகள். இன்று இந்த அரங்கில் கூடியிருக்கும் அனைவரும் புது வெள்ளமென கட்சிக்குள் பாய்ந்து புதிய அரசியல் நீரோட்டதினை உருவாக்கப் போகிறார்கள்...” பெருமிதத்துடன் கெயின் பேசி முடித்தார். ‘மாணவர் இயக்கம்’ என்ற பெயரில் புதியதாக தொடங்கப் பட்டிருந்தது. கெயினின் மகன் பார்திமியஸ்தான் அதன் தலைவர் என்பதால் அது ஏன் ‘சென்னை மாணவர் இயக்கம்’ என்ற பெயர் வைக்கப்படவில்லை என்று யாரும் கேள்வி கேட்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அது சென்னை மாணவர் இயக்கம் கூட இல்லை. மொத்தம் 230 பேரில் கடலூரிலிருந்து 130 பேரும். தஞ்சையிலிருந்து 70 பேரும் வந்திருந்தனர். மீதமிருந்த 30 பேரில் பார்திமியஸுடன் வேலை பார்க்கும் வக்கீல்கள் 15 பேரும் ஆபீஸ் டைப்ரைட்டர்கள் 6 பேரும் பக்கத்து வீட்டு பள்ளி பாலகர்கள் 3 பேரும் போக 6 மாணவர்கள் சென்னையிலிருந்து வந்திருந்தனர். எனவே சென்னை மாணவர் இயக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
சில வருடங்கள் கழித்து பிரான்ஸிஸ் அண்ட் சன்ஸ் வழக்கு முடிவுக்கு வந்தது. தொழிலாளர்களுக்கு 1 லட்சம் நிவாரணம் கிடைத்தது. தொழிலாளர்களின் இழப்பில் இருபதில் ஒரு பங்கு கூட பெறாது என்று புலம்பிக்கொண்டிருந்தனர்  தொழிலாளர்களும் குடும்பத்தினரும். 130 பேரையும் போன் செய்து அப்பாயிண்ட்மென்ட் வாங்கி சென்னைக்கு வந்து செக்கை வாங்கிக்கொள்ளும்படி பார்திமியஸ் ஆணையிட்ட கடிதத்தினை தொழிலாளர்களுக்கு அனுப்பினான்.
ஆளுக்கு 7 ஆயிரம் கொடுத்துவிட்டு செக்கினை வாங்கிக்கொள்ள வேண்டும் என்று சொன்னதைக் கேட்டு லூசிபர் அதிர்ந்து போனான். இறந்துபோன தொழிலாளர்களின் மனைவிகள் தங்கள் அவலநிலை சொல்லி புலம்பி அழுதும் கொஞ்சமும் மனமிரங்கவில்லை. உருப்படியாக பிழைக்காமல் சங்கத்தை நம்பி வாழ்வை இழந்த தங்கள் கணவன்களை சபித்தபடி அவர்கள் வெளியேறினார்கள்.
கோபத்துடன் லூசிபர் உள்ளே நுழைந்தார். “ஏம்பா கொஞ்சமும் மனசட்சியில்லாம இப்படி எரியிற வீட்ல புடுங்கி திங்குறியே உனக்கு வெக்கமா இல்ல?”
“இங்க பாருங்க தோழர். தேவையில்லாம பேசாதீங்க. சும்மாவா தராங்க? காசு வாங்குராங்கல்ல. யாரு கேஸு நடத்துறா? வேணும்னா நீங்க ரெண்டாயிரம் கம்மியா குடுங்க. அவங்களுக்கு எதுக்கு தரணும்? என்ன கட்சிலையா இருந்தாங்க?”
“அடப்பாவி கட்சிய நம்பி வந்தவங்க அவங்க. எவ்ளோ பெரிய தியாகம் பண்ணிருக்காங்க தெரியுமா கட்சிக்காக? இந்த பிச்சைக் காசெல்லாம் என்னத்துக்கு. அவங்க வேலை பாத்திருந்தா எத்தனையோ லட்சம் சம்பாதிச்சிருப்பாங்க”
“அப்படிப் பாத்தா எங்கப்பா எவ்வளவு கோடி சம்பாதிச்சிருப்பாரு. அவரு செஞ்ச தியாகமெல்லாம்...“ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே கையிலிருந்த பேப்பர்களை அவன் முகத்தில் வீசிவிட்டு லூசிபர் வெளியேறினார்.

ஞாயிறு, 5 ஜூலை, 2020

பெண் எனும் உடுக்கை - பெண் எனும் காந்தம்


லூசிபர் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்தான். பஸ்ஸில் கூட்டமும் படியில் நின்றபடி பயணமும் அவனை அலுப்பாக்கியிருந்தது. தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்த மொபைலை எடுத்துப் பார்த்ததில் புதியதாக மூன்று குறுஞ்செய்திகள் வந்திருந்தது தெரிந்தது. அம்மாவிடம் காபியைக் கேட்டுவிட்டு மொபைல் பட்டங்களைத் தட்டி யாரென்று பார்த்தான். புதிய எண்ணாக இருந்தது.

“hi” (“ஹாய்”)
“Hw r u ?” (“ஹௌ ஆர் யூ?”)
“Rompa bisi poola” (“ரொம்ப பிஸி போல?”)
யாரென்று யோசித்தான், எப்படியும் இவனது கல்லூரி நண்பர்களாகத்தான் இருக்க வேண்டும். airtel, aircel, இப்போது vodafoneனாக மாறிய hutch, என எல்லாக்கம்பெனிகளும் போட்டிபோட்டுக்கொண்டு இலவச சிம் கார்டுகளைக் கொடுத்ததிலும் புதியதாக dual sim G-five மொபைல்கள் வந்ததிலும் எல்லாரும் புதிதுபுதியதாக sim கார்டுகள் வைத்திருந்தனர். ஒரு ஐடி கார்டு ஜெராக்சும் போட்டோவும் போதுமானது முப்பது ரூபாய் டாக்டைமுடன் ஒரு sim கார்டு பெற. அதனால் புதிய புதிய நம்பர்களுடன் நண்பர்களுக்கு அனானிமஸ் மெசேஜ் அனுப்புவது பொழுதுபோக்காக இருந்தது.
பொதுவாக இதுபோன்று லூசிபருடன் விளையாடுபவர்கள் இருவர்தான். ஒன்று ஜான்சன், இல்லையேல் மேத்யூ. மேத்யூ ஹாய்க்கு hai என்று பயன்படுத்துவான். ஜான்சன் போலவுக்கு poala என்பான். ஆனால் இது இரண்டிலும் சேராமல் poola என்றிருந்தது. படித்துப்பார்க்கும்போது லேசாக சிரிப்பு வந்தது.

“மே ஐ நோ ஹூ இஸ் திஸ்?” என அனுப்பினான்.

“Lucifer thanaa ninga” என்பதை புரிந்துகொள்ள கொஞ்சம் நேரம் பிடித்தது.

“எஸ்” என்றதற்குப் பிறகு சரியான பதில் வராமல் சில மெசேஜ்கள் வீணானது. இவனுக்கு யாரென்று கண்டுபிடிக்க முடியாததைவிட அந்த ஆங்கில ஸ்பெல்லிங்கை படிக்க முடியாமல் எரிச்சல் வந்தது. “யாருன்னு கண்டு புடிங்க பாக்கலாம்?”, “நல்லா மூளையை கசக்கி பிழிஞ்சு யோசிங்க சார்” என்பதையெல்லாம் ஸ்பெல்லிங் மாற்றிப் போட்டு நீங்களே கற்பனை செய்துகொள்ளவும்.

கடுப்பில், “I don’t have time for your monkey business, tell me who the fuck என்று டைப்பிவிட்டு பிறகு மாற்றி hell are you?” என்று கேட்டான்.
“அய்யய்யோ கோவப்படாதீங்க தோழர், நான்தான் எமிலி, நாம SMல பாத்தோமே?”

Student Movement, கட்சியின் மாணவர் அமைப்பு. எமிலி அதன் மாநில செயலாளராக இருந்தார். நல்ல வேளையாக அவருக்கு Fவார்த்தையை அனுப்பவில்லை என்று நினைத்துக்கொண்டான். லூசிபர் இப்போதுதான் கட்சியில் இணைந்திருந்தான். அவன் இருந்த கிராமத்தில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் நோவாவின் விசாலமான அரசியல் அறிவும். எளிமையான அதேநேரத்தில் காத்திரமான அரசியல் பேச்சுக்களும் லூசிபர் தன்னை கட்சியில் இணைத்துக்கொள்ள காரணமாக இருந்தன. லுசிபர் மாணவனாக இருந்ததால் விழுப்புரத்தில் நடந்த SM கூட்டத்துக்கு சேலத்தின் பிரதிநிதியாக அனுப்பிவைக்கப்பட்டான். அப்போதுதான் எமிலியை முதன்முதலில் சந்தித்தான்.
சம்பிரதாயப் பேச்சுக்களுக்குப் பிறகு எமிலி இப்படிக் கேட்டாள், “உங்களுக்கெல்லாம் நிறைய கேர்ள்பிரண்ட்ஸ் இருக்குமே. உங்களைப் பார்த்தாலே தெரிகிறது”.
இப்படியான flirtingஐ எமிலியிடம் இருந்து லூசிபர் எதிர்பார்க்கவில்லை. மேலும் எமிலி தனக்கு நிறைய பாய்பிரண்டுகள் இருப்பதாக சொல்லிக்கொண்டார். தொடர்ந்து பேசியதில், தனது நண்பர்களைத்தான் boyfriend என்று அவர் சொல்வது புரிந்தது. அதே போல் தனக்கு 'லவ்வர்' இருப்பதாக கூறியபோது ஆதாம் காலத்தில் புதைக்கப்பட்ட லவ்வர் என்ற பதத்தினை பயன்படுத்துவதும் இவனுக்குள் சலிப்பை ஏற்படுத்தியது. கடைசியில் எமிலி சொன்னாள். “SMன் அடுத்த கூட்டம் ஈரோட்டில் நடக்கிறது, நீங்க கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும்”. இந்த ஒரு மெசேஜ்க்காக எதற்கு இவ்வளவு பெரிய அதுவும் கேவலமான flirting என்ற கேள்விக்கு லூசிபருக்கு பதில் 

“கண்டிப்பாக வரேன் தோழர். காலேஜில் டெர்ம் டெஸ்ட் எதுவும் இல்லையென்றால் கண்டிப்பாக வருகிறேன்” என்றான்.
“அட டெஸ்டெல்லாம் போய் எழுதிக்கிட்டு, கட்டடிச்சுட்டு வாங்க தோழர்” என்றார் எமிலி.

SM போன்ற இயக்கங்கள் கொஞ்சம் கூட இன்ஜினியரிங் படிப்பு குறித்த புரிதலின்றி இருப்பது லூசிபருக்கு புரிந்தது. எல்லா மேடையிலும் தமிழ்நாட்டில் 570 தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளை திறக்க அனுமதித்து கல்வி தனியார்மயத்தினை ஊக்குவிப்பதாக கத்திக்கொண்டிருக்கும் அவர்களுக்கு கொஞ்சம் கூட வருடாவருடம் படித்து வெளிவரும் ஒன்றரை லட்சம் மாணவர்களைப் புரிந்துகொள்ளும் தேடல் இல்லை. அவர்கள்தான் ஒவ்வொருவருடமும் படித்து வெளிவந்து துறை சார்ந்த அல்லது சாராத வேளைகளில் ஆளுமை செலுத்துவதும் இவர்கள் கவனத்தில் இல்லை. இன்ஜினியரிங் தேர்வுகள் 75 மதிப்பெண்களுக்கு மட்டும் நடத்தப்படுவதும் மீதி 25 மதிப்பெண்கள் இன்டர்னல் என்ற பெயரில் இதுபோன்ற டெர்ம் டெஸ்ட்கள் மூலம்தான் நிரப்பப்படுகின்றன என்பதும். இவர்களுக்குப் புரிவதில்லை. இதற்கெல்லாம் காரணம் SM போன்ற அமைப்புகள் சட்டக்கல்லூரிகளையும், மிஞ்சிமிஞ்சிப் போனால் சில கலைக்கல்லூரிகளையும் சுற்றியே கட்டமைக்கப் படுவதேயாகும். லூசிபர் யோசித்துப் பார்த்தான். SMல் இவன் சந்தித்த அனைவருமே ஒன்று சட்டம் படித்துக்கொண்டிருந்தனர், அல்லது பன்னிரெண்டாவது மதிப்பெண் குறைந்து சட்டம் படிக்க முடியாததால் கலைக்கல்லூரியில் எதோ ஒரு டிகிரியில் நல்ல மதிப்பெண் பெற்று சட்டம் படிக்க காத்திருப்பது என வக்கீலாவதையே குறிக்கோளாக கொண்டிருந்தனர். அல்லது வக்கீலாக இருந்தனர்.
லூசிபர் தொடர்ந்து SMல் இயங்கியதில், அவர்களால் இன்ஜினியரிங் மாணவர்களின் அடிப்படைத் தேவைகள் என்ன என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை என்பது தெரிந்தது. அவர்களை ஒருங்கிணைத்து செல்ல இவர்களுக்கு புரிதல் போதவில்லை. இன்னமும் தனியார்மயம் என்றும் தனியார் கல்லூரிகள் என்றும் சொல்லிக்கொண்டிருப்பதன் மூலம் அவர்கள் இயல்பாகவே இன்ஜினியரிங் மாணவர்களிடம் இருந்து விலகிப் போய்க்கொண்டிருந்தனர்.

அடுத்த கூட்டத்தில் லூசிபர் சொன்னான், “தோழர்களே நாம் பொதுவாக இன்ஜினியரிங் மாணவர்களுக்கான கோரிக்கைகளை கண்டுக்கிறதில்லை.
1. இப்ப தனியார் கல்லூரிகளுக்கு அரசு விதித்திருக்கிற கட்டணம் வருடத்துக்கு 32,5௦௦ ஆனால் கல்லூரிகள் குறைந்தபட்சம் 5௦௦௦௦௦ தொடங்கி ஒரு லட்சம் ரெண்டு லட்சம் மூணு லட்சம்னு வசூலிக்கிறாங்க. அதை நெறிப்படுத்தணும்.
2. அப்பறம் மாணவர்களோட ப்ராக்டிகல் மதிப்பெண்கள் கல்லூரி ஆசிரியர்கள் கையிலும் நிர்வாகம் கையிலும் இருக்கு. ஏதாவது மாணவனை பிடிக்கலன்னா ப்ராக்டிகல்ஸ்ல குத்திடுவோம் என்று மிரட்டுறாங்க. அதுனால பிராக்டிகல்ஸ் மற்றும் இன்டர்னல்ஸ் வெளிப்படைத்தன்மை வேணும்.
3. ஒருவேளை கல்லூரியின் முறைகேடுகளை ஏதாவது மாணவன் வெளிப்படுத்தினா அந்த மாணவனை கல்லூரி பழிவாங்கிடும். அதுனால அதுபோன்ற புகார்களுக்கு தனியா ஒரு சேவை ஆரம்பிச்சு, அந்த மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் வெளிய தெரியாம பாத்துக்கணும்.
அப்பறம் மாணவர் சங்கங்கள் அமைச்சா இதுபோன்ற பிரச்சினைகள் இருக்காது என்பதால்....” என்று சொல்லிக்கொண்டிருந்த லூசிபரை இடைமறித்து SM தலைவர் கேட்டார்.
“இதுக்கெல்லாம் என்ன காரணம் தோழர் லூசிபர்?”
“சரியில்லாத நிர்வாகங்கள்”
“நிர்வாகங்கள்ன்னா?”
“புரியல தோழர்”
“அதாவது தனியார் நிர்வாகங்கள்தான் இந்த பிரச்சினைகளுக்கு காரணம். அதுனாலதான் நாம கல்வி தனியார் மயத்தை எதிர்க்கிறோம். இப்ப தனியார்மயம் ஒழிந்தால் இந்த பிரச்சினையே இருக்காது பாருங்க” என்றார்.
அதன்பிறகு லூசிபர் பேசவில்லை.

நோவா லூசிபரின் SM வேலைகளுக்கு உந்துசக்தியாக இருந்தார். பக்கத்து கிராமங்களின் மாணவர்களை ஒன்று திரட்டி இரவு நேரங்களில் அரசியல் விவாதங்களை நடத்துவதற்கு கூட்டங்கள் ஏற்பாடு செய்தார். அந்த கூட்டங்களில் கிடைத்த மாணவர்கள் மூலம் ஒரு குட்டி மாநாடும் நடத்தப்பட்டது. அந்த செய்திகளை கட்சி பத்திரிக்கைக்கு கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் சார்லஸ் மூலமாக அனுப்பினாலும் அவை வெளிவரவில்லை. மாறாக சென்னை ஹைகோர்ட்டில் மாணவர்கள் என்ற பெயரில் வக்கீல்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திகளே பெரும்பாலும் SM செய்திகளாக இடம்பெற்றன. கொஞ்ச காலத்தில் லூசிபர் SMல் முக்கியப் பொறுப்பினை அடைந்ததும். சில மாவட்டங்களுக்கு தோழர்களை சந்திக்கும் படி பயணிக்க நேர்ந்தது. அப்போது ஒரு விஷயத்தினை புரிந்துகொள்ள நேர்ந்தது. மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் சென்னையில் அரசியல் கூட்டங்கள் வெகு குறைவாகவே நடந்தன. ஏதேனும் தெருமுனைக் கூட்டங்களும் அரங்கக் கூட்டங்களும் 20 பேருக்குக் குறைவான பார்வையாளர்களோடு நடந்தாலும் நிதிப் பிரச்சினை எப்போதும் சென்னையில் இருந்ததில்லை. மற்ற மாவட்டங்கள் நிதியில் தடுமாறும்போது, சென்னையில் உண்டியலுடன் பேருந்து நிலையத்திலோ அல்லது எலக்ட்ரிக் ட்ரெயினிலோ ஏறினால் இரண்டு மணி நேரத்தில் தேவையான நிதி கிடைத்தது. அதுவே சென்னையின் பிரசார யுக்தி. சென்னை எப்போதும் பிற மாவட்டங்களைவிட முன்னுரிமை கொடுக்கப்பட்டதற்கும் அதுவே காரணம். பொருள்முதல்வாதிகளை பொருளாதாரம் ஆளுமை செய்வது ஒன்றும் பிழையில்லையே.

தனது நீண்டநாள் கனவுப்படி எமிலி SMன் தலைவரானார். தலைமைக்குழுவில் லூசிபருக்கும் இடம் கிடைத்தது. சார்லசுக்கு எமிலி மீது பெரிய நம்பிக்கை இல்லை. அரசியல் கூருணர்வோ விரிவான வாசிப்பு பழக்கமோ இல்லாத எமிலி என்ன அடிப்படையில் தலைவரானார் என்பது சார்லசின் கேள்வி. வெறுமனே உண்டியல் குலுக்கிப் போவது மட்டுமே அரசியலா என்ற அவரது கேள்வியில் நியாயம் இருக்கவே செய்தது. எமிலி நிதி திரட்டுவதைத் தவிர வேறெந்த உருப்படியான காரியங்களிலும் ஈடுபட்டதில்லை. வாசிப்பதோ, எழுதுவதோ அவருக்கு வராது. உண்டியல் வசூல் என்பதும் ஒன்றும் சாதாரண வேலையில்லை. பேருந்தில் ஏறி 1 நிமிடத்தில் நமது கருத்துக்களை கூறி புரியவைத்து வசூலில் ஈடுபட்டு இறங்க வேண்டும். அதிலும் கட்சியின் பெயரால் வசூலிக்கும்போது ஒரு மாதிரியாகவும், இளைஞர் அமைப்பின் பெயரில் வசூலிக்கும்போது ஒரு மாதிரியாகவும், மாணவர் அமைப்புகளின் பெயரில் வசூலிக்கும்போது ஒரு மாதிரியாகவும் வசூல் இருக்கும். கூட ஒரு மாணவி இருப்பது கூடுதல் நம்பகத் தன்மையைக் கொடுக்கும். எனவே இதுபோன்ற வசூலுக்கு செல்கையில் எமிலி ஒரு முக்கிய இடத்தினைப் பெற்றார். இதுபோன்ற யுக்தியினை சில அமைப்புகள் தீர்மானமாக பயன்படுத்தியதை. லூசிபர் கண்டிருக்கிறான். சேலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, ஒரு சில இயக்கத்தில் பெண்களை தினமும் உண்டியல் வசூலுக்கு மட்டுமே பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறான். அவர்களுக்கு வழங்கப்படும் அரசியல் பாடம் ஒன்றே ஒன்றுதான், அரசுக்கு எதிரான மக்களின் மனநிலையை தங்கள் கருத்துக்களில் பிரதிபலிக்க வேண்டும். அதை பணமாக மாற்ற வேண்டும். அவ்வளவுதான். எமிலியும் அப்படியே பயன்படுத்தப்பட்டதில் லூசிபருக்கு வருத்தம்தான்.

என்னதான் தலைமை மாறினாலும் முன்னாள் தலைவரே SMன் mentorஆக இருந்தார். அவரது அனுபவம் SMக்கு வெகு காலத்துக்கு தேவை என்பதே தலைமைக்குழுவினரின் ஒத்த கருத்தாக இருந்தது. அவர் லூசிபரிடம் சொல்லுவார், “தோழர் உங்களை தலைமைக்குழுவில் கொண்டுவர பலத்த எதிர்ப்பு இருந்தது. நான்தான் சிபாரிசுடன் உங்களை தலைமைக்குழுவில் இணைத்தேன்”. அவருக்கு எப்போதும் விஸ்வாசமாக இருக்க வேண்டும் என்று லூசிபர் நினைத்துக்கொள்வான். அவர் தனியாக வாழ்ந்து வந்ததால் லூசிபர் போன்ற தோழர்கள் அவரது வீட்டுக்கு சென்று தங்குவது உண்டு. அப்போதெல்லாம் லூசிபர் “சென்னை போன்ற பெரிய அரசியல் வெளி உள்ள இடங்களில் ஏன் கருத்தியல் ரீதியான வகுப்புகள் எடுப்பதில்லை? இங்கே உள்ள உறுப்பினர்கள் எப்போதும் நிரந்தரமாக உள்ளனரே. புதிய தோழர்களை நோக்கி எப்போது செல்வது?”.

“இன்னாபா நீ. பெருசு பெருசா பேசினுகிற.” என்று எப்போதும் லூசிபருடன் கொஞ்சம் கூடுதல் உரிமையோடுதான் நடந்துகொள்வார். ஒரு தம்பிபோன்ற கண்டிப்புடன், பாசத்துடன் பதிலளிப்பார். “நீங்க வாங்க. வந்து வேலை பாருங்க. வந்தீங்க. அவுள்தான். மெட்ராசே பொரட்டி போட்டுறலாம்” என்பார்.
“இன்னா எமிலி... நீங்களெல்லாம் மெட்ராசு வண்டீங்கன்னா, அப்பறம் உங்க கைல மெட்ராசு. வந்தா அப்படியே மாடர்ன் கேர்ளா மாறிடுவீங்க. அப்பறம் சும்மா காலேஜு பசங்கள்லாம் யார்ரா இந்த பொண்ணுன்னு பாப்பாங்கோ. ஒரு மெசேஜ் பண்ணி மீட்டிங் வாங்கன்னா போதும் உடனே வந்துருவாங்க. வாங்கடா மீட்டிங் போய் அந்த பொண்ண உசார் பண்ணலாம்னு வந்துருவாங்க. என்ன எமிலி” என்றார்.

எமிலி வெள்ளந்தியாக சிரித்தார். லூசிபருக்கு எதோ ஒரு பழைய கேள்விக்கு விடை கிடைத்தது போலிருந்தது.


பெண் எனும் உடுக்கை - முன்னுரை





"அதாவது தோழர், இது குறித்து பெரியார் என்ன சொல்றார்னா..."
"பெண்களுக்கு தோழரின் அறிவுரைகள்..."
"லெனின் இதெல்லாம் என்ன சொல்லிருக்காருன்னா..."
"உங்களுடைய ஸ்டேட்டஸ் அருமை தோழர் லெனின் கூட ஒவ்வொரு ஆணின் தோலைக்கீரினால் ஆணாதிக்கவாதி இருப்பான் என்று..."
"இதே மாதிரிதான் தோழர் அம்பேத்கரின் இந்தியாவில் சாதிகள்ல கூட..."
என்று ஆரம்பித்து, பெண்களின் இன்பாக்சில் அரசியல் வகுப்பு நடத்தும் முற்போக்குவாதிகளை சந்திக்காத பெண்களே இல்லை என்று கூறிவிடலாம்.அரசியல் வகுப்புகள் ஏன் புத்தகங்களில் இருந்து இன்பாக்சுக்கு போனது? அரசியல் வகுப்புக்களை நடத்தவேண்டிய முற்போக்கு இயக்கங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன? மாதர் சங்கங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன?

வெகுகாலங்களாகவே மாதர் சங்கங்களை சினிமா போன்ற வெகுஜன ஊடகங்களில் காட்டும் விதம் இன்றைய FaceBook உலகம் சொல்லும் இப்போது எங்கே போனது மாதர் சங்கங்கள் போன்ற கேள்விகளுக்கு எவ்விதத்திலும் குறைந்தது இல்லை. ஆனால் உண்மையில் மாதர் சங்கங்களின் குறிக்கோள் என்ன? அதன் உறுப்பினர்களை பெண்ணியம் நோக்கி முன்நகர்த்துவதுதானே? அதை சரியாக செய்கின்றனவா? இதுபோன்ற முற்போக்கு மாதர் சங்கங்களை இயக்கும் கட்சிகள் மாதர் சங்கங்களை எப்படிப் பயன்படுத்திக்கொள்கின்றன? வெகுஜன அமைப்புகளின் நோக்கம் என்ன? புரட்சிகர இயக்கத்துக்கு, மக்களை வென்றெடுப்பதுதானே? ஆனால் அப்படி இயல்பில் நடக்கின்றதா? WR தொடங்கி பல மட்டங்களில் பெயர் தெரியாத தலைவர்களை பழிவாங்கும் பகடைக்காய்களை உருவாக்கியது தவிர இவை செய்தது என்ன? என்பதுபோன்ற கேள்விகள் எனக்குள் பலநாட்களாக இருந்துகொண்டிருக்கின்றன. இப்போது புரட்சிகர இயக்கங்களாக காட்டிக்கொள்ளும் பல இயக்கங்களுக்குள்ளும் பெண்ணியம் பெண் விடுதலை என்ற பெயரில் பெண்களை பாலியல் சுரண்டல் செய்யும் பலரைப் பற்றிய செய்திகள் வரும் நேரத்தில் சில விஷயங்களை பேசுவது சரியாக இருக்கும் என்பதை விட பேசாமல் விடக்கூடாது என்பதால் இதனை எழுதுகிறேன்.
பலகாலமாக நான் பேச நினைத்தவைதான் இவை என்றாலும் எனக்குள் இருந்த தயக்கமெல்லாம் பொதுவெளிகளில் பெண்கள் வருவதற்கே தயங்கும் இந்த காலகட்டத்தில் இதுபோன்ற எதிர்மறை கருத்துக்கள் பின்னடைவாகிவிடக் கூடாது என்பதுதான். ஆனால் பெரும்பாலும் இதுபோன்ற இயக்கங்களால் பெண்கள் பண்டங்களாக பயன்படுத்தப்படுவது ஏற்க இயலாதது. அது வெளி உலகின் ஆணாதிக்க சிந்தனைக்கு சிறிதும் குறைபாடில்லாதது. இன்னும் சொல்லப்போனால் சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் ஆணாதிக்க சிந்தனைகூட ஒரு வெளிப்படைத்தன்மை கொண்டது. ஆனால் இதுபோன்ற இயக்கங்களில் புரையோடிக்கிடக்கும் ஆணாதிக்க சிந்தனைகள் பெண்ணியம் என்ற போர்வையில் அவர்களின் ஒப்புதலோடு அவர்களை இன்னும் பயங்கரமாக சுரண்டுகின்றன. இதுபோன்ற ஆண்களால் உடுக்கைபோல் மாறி மாறி இருபுறமும் ஒரே ஆணால் பெண்கள் அடிவாங்குகின்றனர்.
சமூகத்தில் நிகழ்வதுபோலவே சுய சார்புடைய பெண்கள் இதுபோன்ற சுரண்டல்களிலிருந்து தப்பிவிடுகின்றனர். பாதிக்கப்படுபவர்களெல்லாம் அதீத ஆர்வத்தில் முற்போக்கு கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு முற்போக்கு இயக்கங்களுக்குள் வந்து சுயமாக எதையும் கற்காமல் எதோ ஒரு நபரைப் பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் பெண்கள்தான். ஆனால் இதுவெல்லாம் அரசியல் இயக்கங்களின் தோல்விதான் என்பேன். இப்போதெல்லாம் எந்த கட்சியும் அரசியல் வகுப்புகளையோ அல்லது படங்களையோ நடத்துவதில்லை. முன்பெல்லாம் இரண்டு மூன்று நாட்கள் அரசியல் கல்வி நடக்கும். அப்போதெல்லாம் பெண்கள் சுதந்திரமாக வருவதும் தங்குவதும் சிரமங்கள் இருந்ததால் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தன. ஆனால் இப்போது? இப்போதும் அரசியல் வகுப்புகள் நடப்பதில்லை என்பதும் அப்படியே இங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்தாலும் அரைநாள் கூட்டங்களாகவும் ஒருநாள் கூட்டங்களாகவும் சுருங்கிப்போய் அதுபோன்ற கூட்டங்களிலும் பெண்களை சமைக்கும் பொறுப்பை கொடுத்து ஒதுக்குவதும் நடந்துகொண்டுதானே இருக்கின்றது? பிறகெப்படி பெண்களுக்கு அரசியல் தெளிவு பிறக்கும்?
இங்கே பெண்ணியம் பேசும் எல்லா முற்போக்கு அமைப்புகளுக்கும் ஒரே வரலாறுதான். ராமுவும் சோமுவும் சேர்ந்து விவசாயம் செய்துகொண்டிருந்தனர். ராமு வாழைத்தோட்டம் போடலாம் என்றார். சோமு கரும்புத்தோட்டம் போடலாம் என்றார். ரெண்டுபேரும் மாபெரும் சண்டையோடு பிரிந்தனர். வாழைத்தோட்டம் போட விரும்பியவர்களெல்லாம் ராமுவிஸ்ட் ஆனார்கள். கரும்புத்தோட்டம் போட விரும்பியவர்களெல்லாம் சோமுவிஸ்ட் ஆனார்கள். இருவருக்கும் தீராப்பகை போல் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக்கொண்டனர். இதற்கிடையில் தாமு என்பவர் வாழை கரும்பு இரண்டையும் போடுவோம் என்று ராமூவிஸ்ட்-சோமுவிஸ்ட் என்றொரு அமைப்பைத் தொடங்குகிறார். ஆகா இதுதான் முற்போக்கு என்று ஏற்கனவே இரண்டு இஸ்டுகளாகவும் இருந்தவர்கள் இப்போது தாமுவுடன் வந்து சேர்கிறார்கள். இந்த புதிய முற்போக்குவாதிகளுக்கு பழைய முற்போக்குவாதிகள் திரிபுவாதிகளாகவும், பழைய முற்போக்குவாதிகளுக்கு புதிய முற்போக்குவாதிகள் கற்பனாவாதிகளாகவும் தெரிகின்றனர். இதற்கிடையே சோமுவிஸ்ட்-ராமூவிஸ்ட், புதிய ஜனநாயக ராமுவிஸ்ட், குடியரசு சோமுவிஸ்ட், தேசிய இன ராமு சோமுவிஸ்ட், ராமுவிஸ்ட்-சோமுவிஸ்ட்-தாமுவிஸ்ட் என பல்வேறு அமைப்புகளாக அனைவரும் பிரிகின்றனர். இப்படி அணுப்பிளவு நிகழ்ந்துகொண்டிருக்கும்போதே ராமுவும் சோமுவும் தங்களிடம் இருந்த நிலத்தினை பிளாட் போட்டு விற்றுவிட்டு விவசாயமே வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டனர். இருப்பினும் பிரிந்தவர் பிரிந்தவர்தான். இங்கே இதயமும் இனிக்கவில்லை கண்களும் பனிக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் மற்ற அனைவரும் கற்பனாவாதிகளாகவும் திரிபுவாதிகளாகவும் தெரிகின்றனர். அவ்வளவுதான். இதில் எந்த கட்சிகளையும் அமைப்புகளையும் நாம் பொருத்திப்பார்த்துக்கொள்ளலாம்.
இதுபோன்ற முற்போக்கு இயக்கங்களில் பெண்களை பகடைக்காய்களாக்கி விளையாடும் விளையாட்டுக்களை நான் கண்டு அனுபவித்து கேட்டவற்றினை #பெண்_எனும்_உடுக்கை என்ற பெயரில் தொடராக எழுதலாம் என்றிருக்கின்றேன். இவையெல்லாம் எழுதுவது சில சுரண்டல்வாதிகளிடமிருந்து பெண்களை காத்துக்கொள்ளவேயன்றி முற்போக்கு இயக்கங்களிலிருந்து பெண்களைத் தள்ளிவைக்கவல்ல. மேலும் பெண்கள் ஒரு விஷயத்தினைப் புரிந்துகொள்ளவேண்டும். முற்போக்கு இயக்கங்களுக்கும் ஆண்கள் இந்த சமூகத்திலிருந்துதான் வருகின்றனர். எனவே சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் அத்தனை குப்பைகளும் அவர்களுக்குள்ளும் இருக்கும். அதிலிருந்து மீள எவ்வளவு போராடினாலும் பெரும்பாலானோர் ஒரு கட்டத்தில் தோற்கின்றனர். எப்போதும் ஆண்கள் பலவீனமானவர்கள், எனவேதான் பெண்களின் பலவீனத்தின்மீது தங்கள் ஆளுமையை செலுத்த முயல்கிறார்கள். சுயசார்புடைய தைரியமான பெண்களை இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே அரசியல் பழகுங்கள், சுயசார்புடன் இருங்கள்.
இது சில தோழர்களின் மனதைப் புண்படுத்தலாம். அவர்களிடம் முன்கூட்டியே மன்னிப்பு கோரிக்கொள்கின்றேன். எனக்கும் வேறு ஜனநாயகப்பூர்வமான வெளிகள் வழங்கப்படவில்லை என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
எப்படியும் இன்னொரு கும்பல் நான் பிற்போக்குவாதியென்றும், திரிபுவாதியென்றும் இன்னும் என்னவெல்லாமோ சொல்லக் காத்திருக்கும். அது உண்மைதான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன், and the feeling is mutual.
பொறுப்பு துறப்பு: இவை ஒரு இயக்கத்தில் நிகழ்ந்தனவல்ல, சம்பந்தமேயில்லாதவையுமல்ல. நபர்களுக்கு தமிழிலோ சமஸ்கிருதத்திலோ பெயர்வைத்தால் யாரேனும் சொந்தம் கொண்டாடுவதால் ஆங்கிலத்தில் பெயர் வைத்துக்கொள்கிறேன். அப்பறம் முக்கியமான ஒன்று இவையெல்லாம் கற்பனையே என்று நான் சொல்கிறேன். ஒருவேளை இல்லை என்று நீங்கள் சொன்னால் உங்களை நீங்களே சுய பரிசீலனை, சுயவிமர்சனம் என்று எதையாவது செய்துகொள்ளுங்கள்.